மகா இயக்கம் .

அனுமானத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கிறது 
சுயமும் அதன் சார்ந்த புற உலகமும் 
பொருளினை தேடும் வாழ்வு 
இன்னும் எத்தனை நூற்றாண்டு 
தொடர இருக்கிறதோ 
அடுத்த நூற்றாண்டுக்கும் 
இப்பொழுதே பெற்று கொள்கிறது 
என் வன்மம் நிறைந்த 
வாழ்த்துகள்.

இப்பொழுதைய என் இருப்பு 
பிரபஞ்சத்தில் எங்கோ 
ஒரு அணுவிலும் 
இருப்பதற்கான  சாத்தியங்கள் 
அனைத்தும் இருக்கிறது 
நீங்கள் செய்ய வேண்டியது 
அதனை நம்புவது ஒன்றே .

வாழ்வினை நிறைவு செய்யும் 
ஒன்றை தேடும் பொருட்டு 
யுகம் யுகமாய் 
அலைந்த உயிரினத்தில் இருந்து 
இன்னும் கிடைக்கவில்லை .

அப்படி ஒன்று இருக்குமோ என்று 
சந்தேகத்தின் மீதான 
நம்பிக்கையை 
உறுதி செய்கிறது 
அத்தகைய தேடல் கொண்ட 
முறையற்றவன் .

மொத்தத்தில் விடுப்படும் 
என் மனதை 
உன் மகா இயக்கங்களில் 
இயக்க செய்தாய் 
என் பிரபஞ்சமே .
                           -வளத்தூர் தி. ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு